நேரடி வகுப்புக்கு எதிரான வழக்கு மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை: தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல்

மதுரை: நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 1ம் தேதி முதல்  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகள் நடத்தாமல் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, மாணவர்கள் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது குறித்து அரசின் அறிக்கையை தாக்கல் செய்தனர். மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி குறைந்து வருகிறது என்றனர். அப்போது மனுதாரர் தரப்பில், பள்ளி திறந்த முதல் நாளே 9 ஆசிரியர்களுக்கும், 5 மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து பரவ வாய்ப்புள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘நேரடி வகுப்பிற்கு தடை விதிக்கக் கோரி மனு செய்யப்படவில்லை. விரும்பினால் தனி மனுவாக தாக்கல் செய்யலாம்’’ என்றனர்.  

பின்னர் மனு மீதான விசாரணையை செப்.30க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: