கணவரை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தர்ணா-ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் :  தன்னை பிரிந்து வாழும் கணவரை சேர்த்து வைக்க கோரி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர் கோமளா(25). ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படித்தபோது பரமக்குடி அருகே வேந்தோணியைச் சேர்ந்த சதீஸ்குமாருக்கும், கோமளாவுக்கும் காதல் மலர்ந்தது. தேவகோட்டை அருகே சிவனூர் கோயிலில் 2020 ஜூலை 8ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சதீஸ்குமாருக்கு, கோமளா வீட்டார் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தனர். மேலும் பணம், டூவீலர் தருமாறு சதீஷ்குமார் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கும் கோமளா வீட்டார் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனாலும் 2 மாதம் மட்டும் குடும்பம் நடத்தி விட்டு கோமளாவை அவரது பெற்றோர் வீட்டில் சதீஷ்குமார் விட்டுச் சென்றார். தன்னை சஅழைத்துச் செல்லுமாறு கோமளா பலமுறை வற்புறுத்தியும் பல்வேறு காரணங்கள் கூறி சதீஷ்குமார் நாட்கள் கடத்தி வந்தார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமளாவிற்கு கடந்த ஜூன் 17ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை சதீஷ்குமார் பார்க்க வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கோமளா தனது உறவினர்களுடன். கடந்த 28ம் தேதி சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். அங்கு சதீஷ்குமார் உள்பட அவரது உறவினர்கள், கோமளா மற்றும் அவரது உறவினர்களை தரக்குறைவாக பேசினர். இதனால் மனமுடைந்த கோமளா தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் நேற்று கணவர் சதீஷ்குமாரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கோமளா தனது குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கலெக்டர் சந்திரகலாவை சந்தித்து கோமளா மனு கொடுத்தார்.

இது குறித்து கோமளா கூறுகையில், ‘கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார், இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனது பெண் குழந்தைக்கு சதீஷ்குமார் தான் தந்தை. அவர் என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டேன். கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்’ என்றார்.

சதீஷ்குமார் கூறுகையில்,‘கோமளா கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இப்பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்றார்.

Related Stories: