புத்தகப்பையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டாம் என அறிவித்ததுபோல தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நல்லாசிரியர் விருதில் முதல்வர் படம் இல்லை: மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாக அமைச்சர் தகவல்

சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசும்போது, ‘‘பெரியாருக்கு பிறகு திராவிட கழகம், சிறிய அமைப்புதான். ஆனால் வீரியம் கெடாமல் அதை கட்டிக்காக்கிறவர் அண்ணன் வீரமணிக்கு மனமார்ந்த நன்றி. இந்த அரசாங்கம், அவருக்கு அரசியல் சார்பிலே ஒரு தனி மரியாதையை கொடுக்க வேண்டும். எங்களது முதல்வர், இன்றைக்கு கலைஞர் வழியில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். அண்ணா வழிக்கு போனீர்கள். இன்றைக்கு பெரியார் வழிக்கே போய் விட்டீர்கள். தளபதி அவர்களே என்னைவிட நீங்கள் இளைஞர்தான். என்னைவிட அனுபவத்தில் உயர்ந்திருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன்’’ என்றார்.

சபாநாயகர் அப்பாவு: பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய முதல்வருக்கு அனைத்துக்கட்சி சார்பாக எல்லோரும் பாராட்டி உள்ளீர்கள். இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராவத் சொன்னார், அகில இந்திய அளவில் ஒரு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரு முதல்வர் நம்முடைய தமிழக முதல்வர் என்று சொன்னார். அந்த அளவில் தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட பைகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும், எடப்பாடி பழனிசாமி படமும் இருந்தது.

இதை மாற்ற வேண்டுமென்றால் ரூ.13 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் சொன்னபோது, நம்முடைய முதல்வர், ரூ.13 கோடியை வீணாக்க வேண்டாம். அதே பையிலேயே புத்தகங்களை கொடுங்கள் என்று சொல்லி இன்று அகில இந்தியாவில் ஒரு மாபெரும் தலைவராக மகாராஷ்டிரா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ராவத் சொன்னதை கூறி, நானும் பாராட்டுகிறேன். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘புத்தகப்பையில் ஜெயலலிதா படம் அப்படியே இருக்க வேண்டும் என்று சொன்ன அதே முதலமைச்சர்தான், 14 ஆண்டுகளுக்கு பிறகு நல்லாசிரியர் விருது சான்றிதழிலே முதல்வரின் படம் இருக்க கூடாது என்று சொல்லி நேற்று அதையும் 389 ஆசிரியர்களுக்கு நாங்கள் பெருமையோடு வழங்கியிருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: