மீஞ்சூர் அருகே பட்டபகலில் பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை: முன்விரோதமா என போலீஸ் விசாரணை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே பட்டபகலில் டிரைவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் ஹமநாதன் (எ) பாண்டித்துரை (29). திருமணமாகவில்லை. இவர், தந்தை தாயுடன் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் கடந்த 5 வருடமாக வசித்து வந்தார். வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாண்டித்துரை ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு பாண்டித்துரை சென்று கொண்டிருந்தார்.  

நெய்தவாயல் ஜெயா நகர் பகுதியில் வந்தபோது 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்து தலை, கால், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: