உரிமம் இல்லாமல் அனுமதி அளித்த விஏஓ, தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ மீது நடவடிக்கை: திருப்பூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி தாலுகா, மொரட்டுப்பாளையம் கிராமத்தில் நிபந்தனைகளை மீறி செயல்பட்ட குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஜனவரி 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து குவாரி உரிமையாளர் விஸ்வநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த பகுதியில் உரிமம் இல்லாமல் ஏராளமான குவாரிகள் இயங்கி வருவதாகவும் ஆனால் தங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் இயங்கும் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் அசோக்குமாரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 அந்த பகுதிக்கு சென்று மூன்று நாட்கள் ஆய்வு நடத்திய வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த பகுதியில் 64 குவாரிகள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாகவும், உரிமம் பெற்றுள்ள 24 குவாரிகளில், 18 குவாரிகள் நிபந்தனைகளை மீறி செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விதி மீறல் நடந்த குவாரிகளின் புகைப்பட ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒரே பதிவு எண் கொண்ட லாரியை பயன்படுத்தியுள்ளதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்த நீதிபதி, உரிமம் இல்லாமல் செயல்படும் 64 குவாரிகளையும் மூட திருப்பூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அனுமதி இல்லாமலும், நிபந்தனைகளை மீறியும் அவற்றை செயல்பட  அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து செப்டம்பர் 6ம் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: