நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு விழுப்புரத்தில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்-ஆட்சியர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் : தமிழகத்தில் நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளும் துவங்கப்பட உள்ளன. இதனையொட்டி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நேற்று அந்தந்த கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமினை ஆட்சியர் மோகன் நேற்று அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் நமது மாவட்டத்தில் 32 சதவீதம் பேர்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றனர். சென்னையில், கொரோனா தடுப்புப்பணியில் நான் ஈடுபட்ட போது இதன் தாக்கத்தை என்னால் நேரடியாக உணர முடிந்தது. மாணவ, மாணவிகள் உங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

நீண்ட நாட்களாக வீட்டிலிருந்து, நாளை முதல் கல்லூரிக்கு வரவுள்ள நீங்கள் மனதிற்கு ஆறுதலாகவும், நண்பர்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். எனவே, இங்கு வந்திருக்கும் அனைவரும் உங்களது நண்பர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கேரளாவில் கொரோனா அதிகரித்துள்ளது.

காரணம் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடியதில் அங்கு பரவல் அதிகரித்துள்ளது. நாம், சமூக இடைவெளியுடன் அமர்ந்து பாடம் கற்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி, வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ், கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போஸ் கொடுக்க வரவில்லை: டோஸ்விட்ட ஆட்சியர்...

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர் மோகன், பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்யலாம் என்று அங்கிருந்த முதல்வர் சிவக்குமாரிடம் கேட்டார். ஆனால், அதற்கான எந்தப்பணிகளும் கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், டென்ஷனான ஆட்சியர், என்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தீர்களா?. நாளை கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் 60க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை இதுவரை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தவில்லை. இங்கு நம்ம வீட்டு, பிள்ளைகள் படித்தால் இப்படித்தான் விட்டுவிடுவீர்களா என்று சரமாரியாக டோஸ்விட்டார்.

Related Stories: