லீட்சில் தோல்வியின் பிடியில் இந்தியா; பிட்ச் மெதுவாக மாறிவிட்டதால் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கிறது: முகமது ஷமி பேட்டி

லீட்ஸ்: இங்கிலாந்து-இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 3வது டெஸ்ட் ஹெட்டிங்க்லேயின் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் ெசய்த இந்தியா முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் 78 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித்சர்மா 19 ரன் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்தது.

2வது நாளான நேற்றும் ரோரி பர்ன்ஸ்-ஹசீப் ஹமீத் ஆதிக்கம் செலுத்தினர். ரோரி பர்ன்ஸ் 61 (153) ரன்னிலும், ஹசீப் ஹமீத்  68 ரன்னில் ஜடேஜா பந்திலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மலன்-ஜோ ரூட் 3வது விக்கெட்டிற்கு 139 ரன் சேர்த்து மேலும் வலுசேர்த்தனர். அரைசதம் அடித்த டேவிட் மலன் 70 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு புறம் ஒருநாள் போட்டி போல் அதிரடியாக ஆடிய ஜோ ரூட், 124 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் விளாசினார்.

இந்த தொடரில் அவருக்கு இது 3வது சதமாகும். பேர்ஸ்ட்டோ 29, ஜோஸ் பட்லர் 7, மொயின் அலி 8 ரன்னில் ஆட்டம் இழக்க, ஜோ ரூட் 121 ரன்னில் பும்ரா பந்தில் கேட்ச் ஆனார். நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 129  ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன் எடுத்திருந்தது. ஓவர்டன் 24, ராபின்சன் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 2 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இங்கிலாந்து 345 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாள் ஆட்டம் முழுமையாக உள்ள நிலையில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கி உள்ளது.

பேட்டிங்கில் ஏதேனும் அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இநதியா தோல்வியில் இருந்து மீண்டு டிரா செய்ய முடியும். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியதாவது: ஜோ ரூட்டிற்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் பயனற்றவர்கள் என்று சொல்ல முடியாது. அவர் தற்போது பார்மின் உச்சத்தில் இருக்கிறார். ஒரு நல்ல பேட்ஸ்மேன் பார்மில் இருக்கும் போது நிறைய ரன்கள் அடிப்பார். லார்ட்சில் அவர் சதம் அடித்த பிறகும் இந்தியா வென்றது.

அவர் ரன் அடிப்பதை பற்றி கவலைப்படவில்லை. போட்டியின் இறுதி முடிவைப்பற்றி மட்டுமே நினைக்கிறோம். இங்கிலாந்து ரன் எடுத்ததை பற்றி நினைத்து அதிக அழுத்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதற்கு பதிலாக எங்கள் திறனில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், ஆடுகளம் மெதுவாக மாறிவிட்டதால் அவர்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கிறது. இல்லையென்றால், முடிவு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும். இப்போது 2வது இன்னிங்சில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது பற்றி யோசிக்க வேண்டும்.

அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது நிர்வாகத்தின் முடிவு. ஆடும் லெவனில் உள்ள வீரர்கள் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். என்றார்.

Related Stories: