ஆரணி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் செய்த சூபர்வைசர் கைது

ஆரணி: ஆரணி அடுத்த வடுகச்சாத்து டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் தொடர்பாக, சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (47). இவர் வடுகச்சாத்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக இருந்தார். இவர், கடந்த 2016 முதல் 2018 வரை டாஸ்மாக் கடையில் தினமும் வசூலாகும் பணத்தை சரிவர வங்கியில் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. மேலும், மதுபான இருப்பு  விவரங்களையும் சரிவர சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2018ல் அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தபோது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

புகாரின்படி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சூபர்வைசர் அறிவழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் முறைகேடு தொடர்பான முழு அறிக்கையை குற்றப்பிரிவு போலீசார், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமாரிடம் நேற்று முன்தினம் அளித்தனர். அதில், அறிவழகன் ரூ.46 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின், அறிவழகனை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, போளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: