கவர்னர் உரையுடன் தொடங்குகிறது; புதுச்சேரி பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய திட்டங்கள், சலுகைகளுக்கு வாய்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக புதுவை அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்கு திட்ட வரையறை தயார் செய்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில், தற்போது அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (26ம்தேதி) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

முதன்முதலாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழில் கவர்னர் உரையை வாசிக்கிறார். அதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று மதியத்துடன் முடிவடையும் நிலையில், என்ஆர் காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ராஜவேலு முன்னிறுத்தப்பட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்மொழிந்தார். சட்டசபை செயலர் முனுசாமியிடம் இன்று தனது வேட்புமனுவை ராஜவேலு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் ேபாது முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர். இப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாத பட்சத்தில் ராஜவேலு போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அவர் நாளை துணை சபாநாயகராக பதவியேற்றுக் கொள்வார்.

இதனிடையே நாளை பிற்பகலில் 2021-2022ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை சட்டசபையில் (வியாழன்) நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலர் முனிசாமி நேற்று மாலை வெளியிட்டார். அதில், பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி தீவிரமாக ஆலோசித்து சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுககும் பணிகள் அரசு சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களை புதிதாக கொண்டு வருவது, ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களில் எவற்றை உடனடியாக செயல்படுத்துவது, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கவது, வருமானத்தை பெருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன. எனவே தேஜ கூட்டணி அரசு முதன்முதலாக தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: