ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் 17 மாதங்களுக்கு பிறகு வஉசி பூங்கா திறப்பு-வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கம்

கோவை : கோவையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. பூங்காக்கள் மற்றும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவையில் 17 மாதங்களுக்கு பிறகு வஉசி உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

அதன்படி கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 8 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு  3 பேருந்துகள் இயக்கப்பட்டன.

50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் கோவையில் நேற்றைய தினம் தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை.இது குறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த நான்கு மாத காலமாக தியேட்டர்கள் பூட்டியே கிடப்பதால் பராமரிப்பு பணிகள் அதிக அளவில் உள்ளன.

இந்த பணிகள் முடிய ஒரு வார காலம் ஆகும். புது படங்களை வெளியிடும் நடவடிக்கைகளில் வினியோகஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருகிற வெள்ளிக்கிழமை புதிய படங்கள் திரையிடப்படலாம். மேலும் ஆங்கில படங்கள் நேற்று சோதனை ஓட்ட முறையில் திரையிடப்பட்டது. அப்போது ஒலி, ஒளி அமைப்பில் இருந்த சிறிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டன’’ என்றார்.  7 மாதங்களுக்கு பிறகு நேற்று உயிரியல் பூங்கா திறக்கப்பட்டன.

கோவை வஉசி உயிரியல் பூங்கா நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்பட்டதால் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்தனர். பின்னர் பூங்காக்களில் இருந்த பறவைகள், முதலைகள், மான்களை பார்வையிட்டனர். அப்போது சிலர் அங்கிருந்த விலங்குகளுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அப்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீச்சல் குளங்களில் பராமரிப்பு பணிகள் பெரிய அளவில் இருப்பதால் ஒரு சில வாரங்களில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் தனியார் பார்களில் அமர்ந்து மது குடிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலும் நேற்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: