தென்கயிலாயமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு, கேது பரிகார பூஜைக்கு வசூல் வேட்டை: பணம் கொடுத்தால் தான் நிவர்த்தி கிடைக்கும் என மிரட்டல்

ஸ்ரீகாளஹஸ்தி: தென்கயிலாயமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பணம் கொடுத்தால்தான் நிவர்த்தி கிடைக்கும் என மிரட்டி ராகு, கேது தோஷ பரிகார பூஜைக்கு அர்ச்சகர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில் தென்கயிலாயமாகவும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்ய உகந்த தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்நிலையில் ராகு- கேது பூஜை மண்டபங்களில் ஆரத்தி தட்டுகளில் அர்ச்சகருக்கு தட்சணம் வைத்தால் மட்டுமே பரிகாரம் நிவர்த்தி ஆகும் என்று மிரட்டி பக்தர்களிடமிருந்து அர்ச்சகர்கள் பணம்  வசூலிப்பது கடந்த சில நாட்களாக பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. தோஷ பரிகார பூஜைகளுக்கு அர்ச்சகர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பக்தர்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது.

பரிகார பூஜைக்கு 500  டிக்கெட் வாங்கிக்கொண்டு வரும் பக்தர்கள் 116 தட்சணம் வழங்கினால்தான் நிவர்த்தி கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் பகிரங்கமாகவே மிரட்டி வசூலித்து வருகின்றனர். இதேபோல் 700, 1500, 2500, 5,000 விலையில் பரிகார பூஜைக்கான டிக்கெட் வாங்கிக்கொண்டு வரும் பக்தர்களிடம் 1000 முதல் ₹2000 வரை அர்ச்சகர்கள் வசூலித்து வருகின்றனர். கோயில் உண்டியலில் வரும் வருமானத்தை விட ஆரத்தி தட்டுகளில் வரும் காணிக்கைகள் இங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயங்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதுபோல் வழக்கம்ேபால் அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.

இந்நிலையில் விரைவில் புதிய அறங்காவலர் குழு பதவியேற்க உள்ளது. எனவே இனியாவது பக்தர்களிடம் ஆரத்தி தட்டுகளில் அர்ச்சகர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க அறங்காவலர் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு 10 கோடி வருமானம்

திருப்பதி  ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் காளஹஸ்தி சிவன்  கோயிலுக்கும் வந்து செல்கின்றனர். அதன்படி தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை  காளஹஸ்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் 50  ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்வார்கள். இதில் தினமும் 5 ஆயிரம்  முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை ராகு, கேது தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்து  வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக கோயிலில் தினமும் 20 ஆயிரம்  பக்தர்கள் வரையே தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் ஆண்டு வருமானம் 10 கோடியை தாண்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: