வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லீ பார்டி, ஸ்வரெவ் சாம்பியன்

சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிசில்  அலெக்சாண்டர் ஸ்வரெவும், ஆஷ்லீ பார்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர். சின்சினாட்டியில் இன்று அதிகாலை நடந்த வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும், ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவும் மோதினர். இதில் 6-2, 6-3 என நேர் செட்களில் வென்று,  ஸ்வரெவ் சாம்பியன் பட்டம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த ஸ்வரெவ், தொடர்ந்து சின்சினாட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். அவர் கூறுகையில், ‘‘முதன் முறையாக சின்சினாட்டி ஓபன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சிதான். ஆனால் நான் இதை கொண்டாடப் போவதில்லை. ஏனென்றால் ஆண்ட்ரே ரப்லெவும், நானும் 11 வயது முதல் நெருங்கிய நண்பர்கள்.

அவர் தனது முதல் பட்டத்திற்காக எவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அது விரைவில் அவருக்கு கிடைக்கும் என்றார். மகளிர் ஒற்றையர் பைனலில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டியும், ஸ்விட்சர்லாந்தின் ஜில் டெய்க்மானும் மோதினர். இதில் 6-3, 6-1 என நேர் செட்களில் ஜில் டெய்க்மானை எளிதாக வீழ்த்தி, ஆஷ்லீ பார்டி கோப்பையை கைப்பற்றினார். இந்த தொடரில் முதல் சுற்றில் இருந்து பைனல் வரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் ஆஷ்லீ பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  டபிள்யூடிஏ தரவரிசையில் தற்போது 76ம் இடத்தில் உள்ள ஜில் டெய்க்மான், வைல்ட் கார்டு (நேரடி அனுமதி) பெற்று, இந்த டோர்னமென்டில் பங்கேற்று பைனல் வரை முன்னேறி சாதித்துள்ளார்.

Related Stories: