அமெரிக்க படைகள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு!: அதிபர் ஜோ பைடன் பரபரப்பு தகவல்..!!

வாஷிங்டன்: காபூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது ஆப்கானில் இருந்து இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இருப்பதால் அங்கு செயல்படும் மற்றொரு தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கே அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறினார். தாலிபான்கள் ஆப்கானை பிடித்துவிட்டதால் அவர்கள் மீதான கோபம் அமெரிக்க படைகள் மீது திரும்பக்கூடும் என பைடன் குறிப்பிட்டார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொலைதூரத்தில் இருந்து அமெரிக்க படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மற்றும் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். அமெரிக்க ராணுவத்தையும், மக்களையும் காபூல் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான புதிய வழிகளை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே அமெரிக்க அரசு பிரதிநிதிகளின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று குடிமக்களை அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து உரிய அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: