உடுமலை சாலையில் அடிக்கடி உடையும் குடிநீர் குழாய் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் வீண்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அடிக்கடி உடையும் பிரதான கூட்டுக்குடிநீர் குழாயால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு பிரதான குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இதில், அம்பராம்பாளையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் ஒரு பகுதி, பிரதான குழாய் மூலம், உடுமலை ரோடு சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி வழியாக குடிமங்கலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஆனால், இந்த குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்  மூலம் பிரதான குழாய் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீரானது, ஆங்காங்கே வீணாவது வேதனையை ஏற்படுத்துகிறது. இதில், உடுமலை ரோடு தொழில் பேட்டை எனும் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்கிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல், பிரதான குழாயிலிருந்து வெளியேறி ரோட்டில் ஆறுபோல் செல்கிறது. சுமார் 800 மீட்டர் தூரம் வரையிலும் செல்லும் தண்ணீர் பின் பள்ளமான பகுதியில் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.

குழாய் உடைந்து ஆங்காங்கே தேங்கும் தண்ணீரால் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பயன்படும் அத்தியாவசியத்தின் முக்கியமான குடிநீரை சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்க, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரிசெய்து குடிநீர் விரயமாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: