முதல் டெஸ்ட் முடிவை மாற்றியது மழைதான்: இந்திய அணி வெற்றியை 2-0 எனதான் கருதவேண்டும்..! இங்கிலாந்து மாஜி கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் பேட்டி

லண்டன்: இங்கிலாந்து, இந்திய அணிகள்  இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது டெஸ்ட்டில் இந்தியா தோல்வியின் விளிம்புக்கு சென்று அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் 2வது இன்னிங்சில் கடைசி நிலை வீரர்களான முகமது ஷமி, பும்ரா ஆகியோரது பேட்டிங்கும், அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் கையில் இருந்தபோது 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சுலபமாக வெற்றி பெறும் என அனைவரும் கணித்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு டிரா ஆனது.  ஆனால் லார்ட்சில் நடந்த 2வது டெஸ்டின் கடைசி நாளில் இந்திய அணிக்கு வெற்றி சுலபமாக இருந்திருக்கவில்லை. 154 ரன்கள் முன்னணியில் இருந்த ேபாது, இந்திய அணியின் 6 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன. கடைசி நிலை வீரர்களை எளிதாக அவுட்டாக்கி, நாம் அவர்களின் ரன் இலக்கை எளிதாக கடந்து விடலாம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் கடைசி நிலை வீரர்கள் கடுமையாக போராடி 271 ரன்களை குவித்தனர். மேலும் இங்கிலாந்து அணியை 120 ரன்னுக்குள் சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் கூறியதாவது: வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி, வெற்றிக்கு இடையூறாக வரும் தடங்கல்களை கடந்து செல்லும் திறமை ஆகிய தன்மைகளை கவனித்தால் இந்திய அணி முதல் டெஸ்ட்டிலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும். மழை தடங்கலாக வந்துவிட்டது. இருப்பினும் இரு டெஸ்ட்டுகளிலும் இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பதாகத் தான் கருத வேண்டும். இன்னும் 3 டெஸ்ட்டுகள் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியில் பென்ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் 2 டெஸ்ட்களிலும் ஸ்டுவர்ட் பிராட் ஒரு டெஸ்ட்டிலும் விளையாட முடியாத நிலை உள்ளது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோரூட் ஆகியோருக்கு உதவுவார்கள். சிறந்த வீரர்கள் சில வரையறைகள் இருந்தாலும் எப்போதும் உதவுவார்கள். எனவே அனைத்துமே இழப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: