102 ஏக்கர் அனாதீன நிலம் தனி நபர்களுக்கு மாற்றப்பட்ட விவகாரம் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: ஐகோர்ட்டில் தாம்பரம் ஆர்டிஓ அறிக்கை

சென்னை: விதிகளுக்கு முரணாக ரூ.144 கோடி மதிப்புள்ள 102.30 ஏக்கர் அனாதீன நிலத்தை தனி நபர்களுக்கு மாற்றப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் ஆர்டிஓ உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுராந்தகத்தை சேர்ந்த கே.சந்திரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா தாழம்பூர் கிராமத்தில் உள்ள சுமார் 41.41 ஏக்கர் அனாதீன நிலங்களை சத்தியநாராயணன் உள்ளிட்ட 47 தனி நபர்களுக்கு விழுப்புரம் நில சீர்த்திருத்த உதவி ஆணையர் பாலசுப்பிரமணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், 41 ஏக்கர் அனாதீன நிலத்தை லட்சுமி நாராயணன் என்பவர் உள்ளிட்ட 13 பேருக்கு விழுப்புரம் நில சீர்த்திருத்த உதவி ஆணையர் பழனியம்மாள் மாற்றம் செய்து வழங்கியுள்ளார்.

அதேபோல், செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேலு என்பவர் சுமார் 18 ஏக்கர் அனாதீன நிலத்தை ரத்தினராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  இந்த வகையில் சுமார் 102 ஏக்கர் அனாதீன நிலங்கள் விதிமுறைகளுக்கு முரணாக சட்டவிரோதமாக 66 தனி நபர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.134 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மெகா மோசடியில் ஈடுபட்ட நில சீர்திருத்த இணை ஆணையர், உதவி ஆணையர், செங்கல்பட்டு ஆர்டிஓ ஆகியோர் மீது விசாரணை நடத்தக்கோரி காஞ்சிபுரம் எஸ்பியிடம் தாம்பரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார்.

ஆனால், எந்த நடவடிகையும் இல்லை. எனவே, 66 தனி நபர்களிடம் உள்ள அனாதீன நிலங்களை மீட்டு அரசுக்கு ஒப்படைக்க வேண்டும். மோசடியில் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விமல் பி. கிரிம்சன் ஆஜராகி, இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் 3 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஆவணங்களை மாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தாம்பரம் வருவாய் மண்டல நில சீர்திருத்த ஆர்டிஓ டி.ரவிச்சந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

உரிய விசாரணை நடத்தப்பட்டு நில நிர்வாக ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் அந்த  நிலங்களுக்கான பட்டாக்கள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராம கணக்கிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் புகைப்படங்களையும் அவர் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கில் காஞ்சிபுரம் கலெக்டரையும் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: