ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை விடுதலை செய்ய முடியாது!: ஜெர்மனி பிரதமர் கோரிக்கையை நிராகரித்தார் அதிபர் புதின்..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை விடுதலை செய்யுமாறு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் விடுத்த கோரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதே மேடையில் நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான பயணத்தின் போது விஷம் கொடுத்து கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை ஜெர்மனி காப்பாற்றியது. இதையடுத்து மாஸ்கோ வந்த நவால்னி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் நவால்னி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அவர் கோரிக்கைவிடுத்தார். ஆனால் ஏஞ்சலாவின் கோரிக்கையை மேடையிலேயே நிராகரித்தார் அதிபர் விளாடிமிர் புதின்.

நவால்னி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை என்று கூறிய புதின், குற்றவியல் நடவடிக்கை எதிரொலியாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். மாஸ்கோ செய்தியாளர் சந்திப்பில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் இருநாடுகளின் தலைவர்களின் வெளிப்படையான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இருதரப்பு உறவுகள் தீவிரவாத தடுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து புதினும், ஏஞ்சலா மெர்க்கலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: