நிபுணர் குழுவின் பரிந்துரை நிராகரிப்பு பேருந்து கொள்முதலில் ஊழல் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: கெஜ்ரிவாலுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பேருந்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக 1000 தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யவும், ஆண்டு பராமரிப்புக்காவும் கடந்தாண்டு இருவேறு டெண்டர்களை டெல்லி போக்குவரத்து கழகம் வெளியிட்டது. இதில் பேருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரூ.850 கோடி, 12 ஆண்டுகளுக்கான பராமரிப்பு ஒப்பந்தம் மதிப்பீடு ரூ. 3,412 என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் 70:30 விகிதத்தில் ஜேபிஎம் ஆட்டோ மற்றும் டாடா மோட்டார்சுக்கு வழங்கப்பட்டது.  ஆனால், புதிதாக பேருந்து கொள்முதல் செய்தால் அவற்றின் ஆண்டு பராமரிப்பை குறிப்பிட்ட காலத்திற்கு ஏலம் எடுத்த நிறுவனமே பொறுப்பேற்பது வழக்கம் என கூறி, இதில் பெரியளவில் ஊழல் நடந்துள்ளதாக பாஜ குற்றம்சாட்டியது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவை ஆளுநர் அனில் பைஜால் அமைத்தார். இந்த குழு அதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நீக்க பரிந்துரைத்து அறிக்கை சமர்பித்தது. அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் எதுவும் நடைபெறவில்லை. ஆளுநர் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை டெல்லி அரசின் நேர்மைக்கான சான்று என ஆம் ஆத்மி தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த டெல்லி மாநில பாஜ, அதில் தவறு இருப்பதை குழு சுட்டிக்காட்டி உள்ளதாக மீண்டும் புகார் தெரிவித்தது.

இதனிடையே, நிபுணர்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த ஆளுநர் பைஜால் அதனை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், பேருந்து கொள்முதல் விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணைக்கு சிபிஐக்கு ஒன்றிய உள்துறை அமைச்கம் பரிந்துரைத்தது. இதனை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந்த் மோகன், டெல்லி தலைமை செயலர் விஜய் தேவிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Stories: