நாகர்கோவில் அருகே பல வண்ணங்களில் உருவாகும் விநாயகர் சிலைகள் : வட மாநில தொழிலாளர்கள் அசத்தல்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களின் கை வண்ணத்தில் உருவாகி உள்ள விநாயகர் சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி, பா.ஜ., இந்து மகா சபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள்  செய்து, நீர் நிலைகளில் கரைப்பார்கள். இதற்காக தாமரை விநாயகர், கற்பக விநாயகர், அன்னபறவை விநாயகர், சிங்க விநாயகர், புலி வாகன விநாயகர் என பல்வேறு பெயர்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். ஒன்றரை அடியில் இருந்து 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிப்பார்கள். பிரமாண்ட விநாயகர் சிலைகளும் பூஜைக்கு வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

வருகிற 23ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. கேரளாவில் தாக்கம் அதிகமாக உள்ளதால், குமரி மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைத்து  நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிலைகள் தயாரிப்பு பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்துள்ள வில்லுக்குறி அருகே வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் வரை கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்து பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் சிலைகளை வடிவமைத்து பல்வேறு வர்ணங்கள் பூசி வைத்துள்ளனர். இந்த சிலைகள் பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக காட்சி தருகின்றன. அரை அடி முதல் 10 அடி, 12 அடி உயரம் சிலைகள் உள்ளன.

விநாயகர் சிலைகள் மட்டுமின்றி, கிருஷ்ணன், ராதை சிலைகளையும் தயாரித்துள்ளனர். சிலைகளின் உயரத்துக்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகளை ரோட்டோரத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இதை பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி உண்டா? என்பது தெரியாது. ஆனாலும் நாங்கள் வருடந்தோறும் வருவது வழக்கம். கடந்த முறை கொரோனா காலமாக  இருந்ததால், சிலைகள் தயாரிக்க வில்லை என்றனர். தமிழகத்தில் நீர் நிலையில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்து அமைப்புகள் சார்பிலும் களிமண்ணால் ஆன சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் எளிய முறையில் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்தி, நீர் நிலைகளுக்கு கொண்டு செல்வோம் என நிர்வாகிகள் சிலர் கூறினர்.

Related Stories: