திருச்சுழி அருகே பத்தடி தூர பள்ளத்தால் பல கி.மீ சுற்றி வரும் மக்கள்: பஸ்சும் வரவில்லையென மக்கள் புகார்

திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர்பெருங்குடி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரெட்டியபட்டியிலிருந்து சுத்தமடம் செல்லும் சாலையிலிருந்து மறவர்பெருங்குடி கிராமம் வழியாக பந்தல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தூர் ஆகிய நகரங்களுக்கு இச்சாலையை தும்முசின்னம்பட்டி, சலுக்குவார்பட்டி, சுத்தமடம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இக்கிராமங்களிலிருந்து பந்தல்குடி செல்ல வேண்டுமென்றால் சுமார் 7 கி.மீ தூரம் தான் உள்ளது. தற்போது சில வருடங்களாக மறவர்பெருங்குடி ஊருக்குள் வழியாக செல்லும் சாலை பத்து அடி தூரம் போடாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர், சாக்கடை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 25 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலையுள்ளது. அதே போன்று பள்ளம் இருக்கின்ற மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் சிறிய வாகனத்தில் மெயின் சாலைக்கு வரவேண்டுமென்றால் கூட சுற்றிதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்காக 108 வாகனம் அப்பகுதிக்கு செல்ல முடியாமல் நோயாளிகளை தூக்கிச் சென்று பள்ளத்தை கடந்து வாகனத்திற்கு ஏற்ற வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளத்தை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டுமென கூறினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சாத்தூரிலிருந்து பந்தல்குடி, மறவர்பெருங்குடி வழியாக கமுதிக்கு தினந்தோறும் 3 முறை அரசு பஸ் சென்று திரும்பின. மறவர்பெருங்குடியிலுள்ள பள்ளத்தை காரணம் காட்டி அரசு பஸ்கள் இவ்வழித் தடத்தையே மறந்து பல வருடங்களாயிற்று. இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் சுமார் 25 கி.மீ சுற்றி பந்தல்குடிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் பந்தல்குடியிலிருந்து மறவர்பெருங்குடி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சில காரணங்களால் பள்ளத்தை மட்டும் விட்டு விட்டு மீதமுள்ள சாலையை தார்ச்சாலையாக போட்டு சென்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பஸ் வராமல் போனது. எனவே, இப்பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: