தீபாவளி பண்டிகை நெருங்குது பட்டாசு வாங்க வியாபாரிகள் வராததால் சிவகாசி `வெறிச் ‘: உற்பத்தியாளர்கள் கவலை

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்க வெளியூர் வியாபாரிகள் வருகை தராததால் சிவகாசி வர்த்தக நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால்  உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.சிவகாசி நகரில் பட்டாசு, அச்சு மற்றும் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு தொழில் நிமித்தம் காரணமாக தினந்தோறும் ஏராளமான வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் சிவகாசி நகர் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில்  தங்கி இருப்பர். சிவகாசி பஸ்நிலையத்திலும் வெளியூர் பயணிகள் அதிகமாக வந்து செல்வர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சிவகாசியில் வர்த்தம் பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. இதில் பட்டாசு தொழில் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை சீசன் காலம்  என்பதால் வெளிமாநில வியாபாரிகள் சிவகாசியில்  முகாம் அமைத்து பட்டாசு ஆர்டர்களை புக்கிங் செய்வது வாடிக்ைகயாகும்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா 3வது அலை செப்டம்பர் மாதம் துவங்க வாய்ப்பு உள்ளது என மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதனால் வெளிமாநில வியாபாரிகள் யாரும் சிவகாசிக்கு வருகை தரவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே சிவகாசி நகருக்கு வந்துள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் சிவகாசி நகரம் தற்போது வெறிச்சோடி கிடக்கிறது. ஓட்டல்கள், தனியார் விடுதிகள் வெளியூர் ஆட்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகாசியில் ஆடி 18 அன்று பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை துவங்கும். இங்கு உற்பத்தி விலையில் பட்டாசு விற்பனை செய்ய படுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வியாபாரிகளும் சிவகாசி வந்து பட்டாசு ஆர்டர்கள் வழங்கி செல்வார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாபாரிகள் சரிவர வரவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தியாகர்ள், கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல் அச்சு தொழிலும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது காலண்டர் சீசன் தொடங்கியுள்ளது. சிவகாசி நகரில் மட்டும் 300 கோடி வரை காலண்டர் விற்பனை நடைபெறும். இந்த தொழிலும் போதிய அளவு ஆர்டர்கள் வராததால் அச்சு தொழில் பாதிப்படைந்துள்ளது. சிவகாசியில் வெளியூர் வியாபாரிகள் வருகையின்றி அனைத்து வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

5% ஆர்டர்கள் கூட வரவில்லை

இதுகுறித்து வியாபாரி கற்பகவிநாயகம் கூறுகையில், `` சிவகாசியில் தற்போது காலண்டர், மற்றும் பட்டாசு விற்பனை சீசன் துவங்கியுள்ளது. ஆனால், கொரோனா 3வது அலை அச்சம் காரணமாக வியாபாரிகள் ஆர்டர்கள் வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர். வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருகை தராததால் பட்டாசு கடை வணிகம் மந்தமாக உள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக கிப்ட் பாக்ஸ் ஆர்டர்கள் புக்கிங் செய்ய ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தற்போது வரை 5 சதவீத ஆர்டர்கள் கூட வரவில்லை. இதனால் பட்டாசு கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: