தேசிய சிலம்ப போட்டி திருத்தங்கல் சகோதரிகள் தங்கம் வென்று சாதனை

சிவகாசி : ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தேசிய சிலம்ப போட்டியில் திருத்தங்கல் சகோதரிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், முத்துமாரி நகரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள்கள் அஸ்வினிபிரியா (16), ஹேமலதா (14). முறையே 10ம் வகுப்பு, 9ம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும் டிகேஎஸ் அகாடமியில் சிலம்பம் கற்று வருகின்றனர்.

 ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கர்நாடகா, சிக்கிம் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் சென்னை, கோயம்புத்துார், விருதுநகர், திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120 பேர் பங்கேற்றனர்.

இதில் திருத்தங்கல் சகோதரிகளான இருவரும் தனி, தனி பிரிவுகளில் போட்டியிட்டு தங்கம் வென்று சாதித்தனர். இருவரும் அடுத்து நேபாள நாட்டில் நடக்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து சகோதரிகள் அஸ்வினிபிரியா, ஹேமலதா கூறுகையில், ‘‘5 வயதிலிருந்து சிலம்பம் கற்று வரும் நாங்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம். தற்சமயம் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச போட்டிகளிலும் சாதிப்போம்’’ என்றனர்.

Related Stories: