தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது!: கனடா சட்டத்தின்படி தாலிபன்கள் தீவிரவாதிகளே..பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு..!!

ஒட்டாவா: தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என நமது அண்டை நாடான சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில்கனடா நாட்டு சட்டத்தின்படி தாலிபன்கள் தீவிரவாதிகளே என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். எனவே தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக கனடா ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கனில் உள்ள கனடா நாட்டினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதிலேயே தங்களின் முழு கவனம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். வெளிநாட்டினர் ஆப்கனில் இருந்து வெளியேறுவதை தாலிபான்கள் தடுக்கக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார். ஆப்கன் நிலவரம் குறித்து வரும் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: