பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் பிரமாண பத்திரத்தில் திருப்தி இல்லை: விரிவான அறிக்கை தர உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 பக்க பிரமாணப் பத்திரத்தில் திருப்தி இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர் பாக மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு தரப்பில் 2 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘ஆதாரமற்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வல்லுனர் குழுவும் விரைவில் அமைக்கப்பட உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. ஆனால் மனுதாரர்கள் தரப்பில் இது பரபரப்பாக்கப்படுகிறது’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள 2 பக்க பிரமாணப் பத்திரத்தில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. அதில் போதுமான விவரங்கள் கிடையாது. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரிவான பதில்கள் தேவைப்படுகிறது. முந்தைய விசாரணையின் போது பெகாசஸ் உளவு பொருட்கள் எப்போது இருந்து அரசு தரப்பில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பான விவரங்கள் பிரமாணப் பத்திரத்தில் இல்லை. அதனால் முழு விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை பத்து நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: