வேதாரண்யத்தில் ஒரே நாளில் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மூதாட்டி: மருத்துவமனையில் சேர்த்து கண்காணிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த  வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.  பெரிய திடல் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளியான நாகப்பன் மனைவி அலமேலு(70), கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து முகாம் நடந்த இடம் அருகே உள்ள மரத்தடியில் அலமேலு அமர்ந்திருந்தார். அப்போது ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று அங்கு நின்ற ஒரு சிலர் கூறினர். மேலும் ஏற்கனவே ஊசி போட்டது தெரியாமல் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்த அலமேலுவையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அந்த வரிசையில் அங்கிருந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.

2 தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்து அலமேலுவும் வரிசையில் சென்றார். அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு அலமேலு சென்று தனக்கு 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது என்று தனது மகளிடம் கூறினார். இந்த விஷயம் வௌியில் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்ததும் அலமேலு வீட்டுக்கு வேதாரண்யம் பகுதி சுகாதார துறையினர் நேற்று மாலை சென்று விசாரித்தனர். அப்போது 2 கொரோனா தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அலமேலுவை அழைத்து சென்று தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மருத்துவமனையில் உடல் ஆரோக்கியத்துடன் அலுமேலு உள்ளார்.

Related Stories: