சின்சினாட்டி: சின்சினாட்டியில் நடந்து வரும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிவிட்டோவா, ஆடவர் ஒற்றையர் பிரிவில் டீகோ ஸ்வார்ட்ஸ்மேன், ஆண்டி முர்ரே ஆகியோர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சின்சினாட்டி நகரில் (அமெரிக்கா) இதுவரை சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் நடந்து வந்த டென்னிஸ் போட்டிகள் தற்போது வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி முதல் தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் சுற்றுப் போட்டிகள் துவங்கின.
இறுதிப்போட்டி வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று அதிகாலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் செக். குடியரசின் முன்னணி வீராங்கனை பெட்ரா கிவிட்டோவாவும், அமெரிக்க வீராங்கனை மாடிசன் கீஸ்சும் மோதினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 11ம் இடத்தில் உள்ள கிவிட்டோவா, இப்போட்டியில் 7-5, 6-4 என நேர் செட்களில் மாடிசன் கீஸ்சை வீழ்த்தினார். முதல் செட்டில் சற்று போராடிய மாடிசன் கீஸ், 2ம் செட்டில் பிளேஸ்மென்ட்களில் அடிக்கடி கோட்டை விட்டு, தடுமாறினார். அதனால் போட்டி எளிதாக கிவிட்டோவின் வசமானது.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் டீகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன், இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வீரர் டான் இவான்ஸ் மோதினார். ஏடிபி தரவரிசையில் தற்போது 14ம் இடத்தில் ஸ்வார்ட்ஸ்மேன், இந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விம்பிள்டனில் மட்டும் 3ம் சுற்று வரை முன்னேறிய அவர், தற்போது யு.எஸ்.ஓபனுக்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று நடந்த இவான்சுக்கு எதிரான இப்போட்டியில் அவர் முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2ம் செட்டை 6-4 என கைப்பற்றி இவான்ஸ் அதிர்ச்சி கொடுத்தார்.இதனால் 3வது சுற்றில் தாக்குதல் பாணியை கடைபிடித்த ஸ்வார்ட்ஸ்மேன், அடிக்கடி நெட்டுக்கு ஏறி, பிளேஸ்மென்ட்டுகளில் கவனம் செலுத்தினார். அவர் நினைத்த இடத்தில் பந்தை துல்லியமாக பிளேஸ் செய்து, அந்த செட்டை கைப்பற்றி, இவான்சை 6-2, 4-6, 6-3 என 3 செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்வார்ட்ஸ்மேன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆண்டி முர்ரேவும், பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கட்டும்மோதினர். இதில் ஆண்டி முர்ரே 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று, அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். தென்னாப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிஸ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் மற்றும் ரஷ்ய வீரர் கேரன் காச்சனோவ் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டிகளில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.