பரபரப்பான கட்டத்தில் இன்று கடைசி நாள் ஆட்டம்; 200 ரன்னுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் வெற்றி பெறலாம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் பேட்டி

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129, ரோகித்சர்மா 83 ரன் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 128 ஓவரில் 391 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 180 ரன் விளாசினார். பேர்ஸ்டோ 57 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில் முகமது சிராஜ் 4, இசாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 27 ரன் பின்தங்கிய நிலையில் 4வது நாளான நேற்று இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் 5, ரோகித் 21 ரன்னில் மார்க்வுட் பந்தில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் கோஹ்லி தனதுபங்கிற்கு 20 ரன் எடுத்து சாம்கரன் பந்தில், பட்லரிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், புஜாரா-ரகானே பொறுப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

பார்ம் இழந்து தடுமாறிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். சரமாரி பவுன்சர்களை எதிர்கொண்டு ஆடிய இவர்கள் 4வது விக்கெட்டிற்கு 120 ரன் சேர்த்த நிலையில், புஜாரா 46 ரன்னில் (206பந்து,4பவுண்டரி) மார்க்வுட்டின் பவுன்சர் பந்தில் கேட்ச் ஆனார். மறுபுறம் அரைசதம் அடித்த ரகானே 61 ரன்னில் மொயின் அலி பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜடேஜா 3 ரன் எடுத்த நிலையில் மொயின்அலி பந்தில் போல்டானார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 82 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது. ரிஷப் பன்ட் 14, இசாந்த் சர்மா 4 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்னும் 4 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்தியா 154 ரன்முன்னிலை பெற்றுள்ளது. பரபரப்பான நிலையில் இன்று கடைசிநாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் தான் சவாலான இலக்காக இருக்கும். இதனால் ரிஷப் பன்ட் இந்திய அணியை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் அளித்த பேட்டி: 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது. 5வது நாளில் ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும். மொயின் அலி 2 விக்கெட் வீழ்த்தியதை பார்த்தோம். அவரது பந்து நன்றாக சுழன்றது. எனவே பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறிவிட்டது. எனவே நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொள்வோம், அது எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

ஜடேஜா  பந்துக்கு எதிராக பேட் செய்வது எளிதாக இருக்காது. எங்களிடம் நல்ல வேகப்பந்துவீச்சு தாக்குதலும் இருக்கிறது. இன்று 30-40 ரன் கூடுதலாக சேர்த்து 1, 2 ஆரம்ப இங்கிலாந்து விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால், அவர்கள் மீது அழுத்தம் இருக்கும், என்றார்.

230 ரன்னுக்கு மேல் இலக்கு கடினமாக இருக்கும்-மொயின் அலி

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி கூறுகையில், 220-230 ரன்னுக்கு மேல் இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இது சாத்தியமற்றது அல்ல. நாளை (இன்று) 2 அணிகளுக்கும் புது பந்து முக்கியமானது. ஒரு அற்புதமான விளையாட்டாக இருக்கும். மார்க்வுட் சிறப்பாக பந்துவீசினார். புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பானது, என்றார்.

Related Stories: