கட்சி அலுவலகங்களில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் விழா கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் அருகில் உள்ள சென்ட் ரல் ஸ்டேடியத்தில் முதல்வர் பினராய் விஜயனும், மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்களும் தேசிய கொடியேற்றினார்கள். இதில், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவில் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதில் இருந்து, அக்கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவில்லை.

சுதந்திர தினத்தை  முன்னிட்டு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதும் கிடையாது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்  மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், இந்த ஆண்டு முதல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விஜயராகவனும், மாவட்ட கட்சி அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்களும் தேசிய கொடியேற்றினர்.

Related Stories: