தமிழக எல்லையில் சான்றிதழ் பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதி

ஊட்டி: கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா  பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ததற்கான  சான்று உள்ளதா? என மாநில எல்லையில் பரிசோதனை செய்த பின்னரே  அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளா மற்றும் கர்நாடகத்தின் எல்லையில்  நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் மாநிலங்களுக்கு இடையே சென்று வருகின்றனர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு  நீலகிரி மாவட்ட நிர்வாகம் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக  மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க  வேண்டும் அல்லது 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ்கள்  வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 இதனை தொடர்ந்து நீலகிரி  மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும்  சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்தற்கான சான்று  மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை சரிபார்த்த பின்னரே  அரசுத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். குறிப்பாக, தமிழக-கர்நாடக  எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி, தமிழக-கேரள எல்லையில் உள்ள  நாடுகாணி உட்பட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் சான்றிதழ் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: