திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்து திரும்பிய 750 பக்தர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மற்றும் மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பிரசாரம் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்களிடையே மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளின் நடமாட்டத்தை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சென்று, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் வீட்டிலிருந்தே மஞ்சள் பை அல்லது வேறு ஏதேனும் துணிப்பைகளை பொதுமக்கள் எடுத்து சென்று பொருட்களை வாங்கி செல்லும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பக்தர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயிலில் முருகனை தரிசித்துவிட்டு திரும்பும் 750 பக்தர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் மற்றும் செயலர் ஆர்.கண்ணன் மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பொருட்களை அறவே கைவிட வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை appeared first on Dinakaran.

Related Stories: