திருவையாறு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விற்க வெளிமாவட்டத்திலிருந்து லாரியில் வந்த 350 மூட்டை நெல் பறிமுதல்: அதிமுக பிரமுகர் மூலம் விற்க வந்தது அம்பலம்

திருவையாறு: திருவையாறு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் மூலம் விற்க, வெளிமாவட்டத்திலிருந்து லாரியில் கொண்டு வந்த 350 மூட்டை நெல் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாவட்டத்திலிருந்து நெல் மூட்டைகளை கடத்தி வந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இருப்பதாக திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் நேற்று இரவு திருவையாறு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருப்பூந்துருத்தி அருகே சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.

அதில் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 350 நெல் மூட்டைகள் இருந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், லாரியை திருவையாறு தாலுகா அலுவலத்தில் ஒப்படைத்தார். பின்னர் லாரி டிரைவர் மணிமாறனிடம் (43) விசாரித்ததில், மதுராந்தகத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்து அதை, குழிமாத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் மூலம் விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த அதிமுக பிரமுகர் யார் என மணிமாறனிடம் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: