எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு: பட்ஜெட் தாக்கலை புறக்கணித்தனர்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேசுவதற்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, சென்னை கலைவாணர் அரங்கில் 3வது தளத்தில் சட்டசபைக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக காலை 9 மணி முதலே எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பேரவைக்கு வரத்தொடங்கினர். காகிதமில்லா சட்டசபையை உறுவாக்கும் வகையில் மின் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையை தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இடத்திற்கு முன் கம்யூட்டர் மற்றும் கையடக்க தொடுதிரை கணினி வைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கும் இதே வசதி செய்யப்பட்டிந்தது. இதுதவிர பெரிய திரை கொண்ட டிவியில் பட்ஜெட் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக 9.58 மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதையடுத்து, சரியாக 9.59 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார். அவருடன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் வந்தார். அப்போது, திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர். சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு திருக்குறள் படித்து பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து சபாநாயகர் பேசும் போது ‘காகிதம் இல்லாத சட்டசபையை உறுவாக்கும் வகையில் தமிழகத்தின் 2021-22ம் ஆண்டுகான திருத்திய நிதிநிலை அறிக்கை மின் நிதிநிலைய அறிக்கையாக இன்று முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்பும் கணினி வசதியும், கையடக்க தொடுதிரையும் வைக்கப்பட்டுள்ளது. கணினியில் நிதி அமைச்சர் படிக்கும் போது அவர் படிக்கும் வாசகம் அதில் தெரியும். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்ட தொடுதிரையில் இரண்டு பிடிஎப் பைல் உள்ளது. அதில், எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அச்சிடப்பட்ட புத்தகம் தேவைப்படுவோர் முதலாவது அறையில் பெற்றுக்கொள்ளலாம். தற்போது நிதி அமைச்சர் 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை மின் நிதிநிலை அறிக்கையாக சபைக்கு தாக்கல் செய்வார்’ என்றார்.

இதையடுத்து சரியாக 10.4 மணிக்கு நிதி அமைச்சர் பட்ஜெட்டை கணினி வாயிலாக வாசிக்க தொடங்கினார். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால், அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை. அதனால், அவர் பேசியது மற்றவர்களுக்கு கேட்கவில்லை. அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் வேறு யாருக்கும் பேச அனுமதி இல்லை உட்காருங்கள். வருகிற திங்கள் கிழமை பட்ஜெட் மீது விவாதம் நடக்க இருக்கிறது. அப்போது உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். இன்று உங்களுக்கு பேச அனுமதி இல்லை. நீங்கள் பேசும் எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது’ என்றார்.

இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு மைக் இணைப்பு கொடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மைக் இணைப்பு கொடுக்கப்படாமல் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் 3 நிமிடம் பேசினார். பின்னர், 10.7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓபிஎஸ் உட்பட அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: