சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு கர்நாடகா சிறைத்துறை எஸ்பி வீட்டில் ஊழல் தடுப்பு படை அதிரடி சோதனை

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டணை அனுபவித்த சசிகலாவிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கு தொடர்பாக  நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையில் பணியாற்றிய முன்னாள் எஸ்.பியின் வீட்டில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா, மற்றும் எஸ்.பி கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை நிரூபணம் செய்யும் நோக்கில் அப்போதைய சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி ரூபா, சசிகலாவின் அறையில் அதிரடி சோதனை நடத்தி, பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினார். அந்த ஆதாரங்களை மாநில அரசுக்கும் ஒப்படைத்தார். அதில் தண்டணை கைதி சசிகலாவிடம் இருந்து  சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா மற்றும் எஸ்.பி கிருஷ்ண குமார் ஆகியோர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சொகுசு வசதிகள் செய்தி கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை ஏற்ற மாநில அரசு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.

அவர்கள்  நடத்திய விசாரணையில் சசிகலா லஞ்சம் வழங்கியது உண்மைதான் என்பது உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கு ஊழல் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டாக இது குறித்து விசாரித்து வந்த ஊழல் தடுப்பு படை  அதிகாரிகள் நேற்று முறையான ஆதாரங்களின் பேரில் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை முன்னாள் எஸ்.பி கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். தற்போது அவர் பெலகாவி மத்திய சிறைச்சாலையில் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பெலகாவியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், பெங்களூரு மற்றும் பெலகாவி மாவட்ட ஊழல் தடுப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சசிகலாவிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சப்பணம் தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் மூலம் வாங்கிய சொத்துகள் தொடர்பான ஆவணங்களை ஊழல் தடுப்பு படை அதிகாரிகள்  பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தவுள்ள நிலையில், எஸ்.பி கிருஷ்ண குமார், ஊழல் தடுப்பு படை சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை.

விசாரணைக்கு தேவைப்படும்போது நேரில் வரவேண்டுமென்று கூறியுள்ளனர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்துள்ளேன் என்றார். பரப்பன அக்ரஹாரா சிறை ஊழல் தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊழல் தடுப்பு படை சோதனை நடத்தியிருப்பதால், முன்னாள் டி.ஜி.பி சத்தியநாராயணா உள்பட சில அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சசிகலா லஞ்சம் கொடுத்த வழக்கு மீண்டும் விஸ்பரூபம் எடுக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: