இந்தியாவில் செயல்படும் அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.49,000 கோடி வெளிநாட்டு நன்கொடை!: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை பெற்றிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசுத்துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது. இந்நிலையில், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் இந்தியாவில் 18,377 அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து 2017 - 2018ம் ஆண்டு 16,940 கோடி ரூபாயும், 2018 - 2019ம் ஆண்டு 16,525 கோடி ரூபாயும், 2019 - 2020ம் ஆண்டு 15,853 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டத்தின்படி அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடையை பெற டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி பிரதான கிளையில் இதற்கான தனி கணக்கு திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார். 

Related Stories: