சின்சினாட்டி ஓபன்... விலகினார் ஜோகோவிச்!

அமெரிக்காவில் நடைபெற உள்ள சின்சினாட்டி வெஸ்டர்ன் & சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து (ஆக. 15-22) விலகுவதாக, உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள தகவலில் ‘அன்பு ரசிகர்களே, ஆஸ்திரேலியாவில் இருந்து டோக்கியோ வரையிலான கடினமான பயணத்தின் களைப்பில் இருந்து மீண்டு புத்துணர்வு பெறும் வகையில் இந்த ஆண்டு சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகுகிறேன். குடும்பத்தினருடன் கணிசமான நேரத்தை செலவழிப்பதுடன் யுஎஸ் ஓபனுக்கு தயாராகவும் இந்த ஓய்வு எனக்கு உதவும்.

விரைவில் நியூயார்க்கில் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று பெடரர், நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச், டோக்கியோ ஒலிம்பிக்சிலும் தங்கம் வென்று ‘கோல்டன் ஸ்லாம்’ சாதனை வாய்ப்பை தக்கவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரை இறுதியில் ஜெர்மனியின் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவிடம் அவர் போராடி தோற்றதுடன், வெண்கலப் பதக்கத்துக்கான மோதலிலும் ஸ்பெயினின் பாப்லோ புஸ்டாவிடம் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: