ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல்முறையாக 7 பதக்கங்களை வென்று அசத்தியது. பதக்கம் வென்ற மீராபாய், சிந்து ஏற்கனவே நாடு திரும்பிய நிலையில் எஞ்சிய வீரர், வீராங்கனைகள் நேற்று வெற்றிப் பதக்கங்களுடன் நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மன்பிரீத் தலைமையிலான ஹாக்கி அணி வீரர்கள், ராணி ராம்பால் தலைமையிலான ஹாக்கி அணி வீராங்கனைகள், ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ரவிகுமார், பஜ்ரங் ஆகியோரை வரவேற்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஏராளமான ரசிகர்களும் குவிந்திருந்தனர். அவர்களுடன் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகிகளும் வீரர், வீராங்கனைகளை வரவேற்றனர். விமான நிலையத்தை விட்டு வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வர கூடி இருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

அப்போது தேசியக் கொடியை உயர்த்தியும், வரவேற்பு அட்டைகளை காட்டியும் ஆரவாரம் செய்தனர். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பதான், இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அடில்லே சுமரிவாலா உள்ளிட்ட அதிகாரிகள், நிர்வாகிகள், உறவினர்கள் வீரர்களுக்கு பூமாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். வீரர்கள் பதக்கங்களை உயர்த்தி காண்பித்தபோது விமானநிலையம் உணர்ச்சிமயமானது. ரசிகர்கள் சக பயணிகள், வீரர்களுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அதனால் போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தி வீரர்கள், வீராங்கனைகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

Related Stories: