சிட்டி ஓபன் டென்னிஸ் ஜானிக் சின்னர் சாம்பியன்

வாஷிங்டன்: இம்மாத இறுதியில் தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக அமெரிக்கா, கனடாவில் ஏடிபி, டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஏடிபி சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் (15வது ரேங்க்), அமெரிக்காவின் மெக்கென்சி மெக்டொனால்டுடன் (26 வயது, 64வது ரேங்க்) மோதினார். உலக தர வரிசையில்  பின்தங்கியிருந்தாலும் இப்போட்டியில் மெக்கென்சி கடும் சவாலாக இருந்தார். அதனால்  ஜானிக் வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ஜானிக் போராடி வென்றார்.

2வது செட்டை மெக்கென்சி 6-4 என கைப்பற்றினார். வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் குவிக்க இழுபறியானது. ஜானிக் அந்த செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். சுமார் 2 மணி, 53 நிமிடங்கள் நீண்ட பைனலில் ஜானிக் 2-1 என்ற செட்களில் வென்று சிட்டி ஒபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏடிபி 500 அந்தஸ்து தொடரில் பட்டம் வென்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரின் 3வது சுற்றில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

* டேனியலி அசத்தல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் ‘முபாதலா சிலிக்கான் வேலி கிளாசிக்’ மகளிர் டென்னிஸ் தொடர் நடந்தது. அதன் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை டேனியலி கோலின்ஸ் (28வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா (27வது ரேங்க்) மோதினர். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் டேனியலி  6-3, 6-7 (10-12), 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி, 18 நிமிடங்கள் நடந்தது. கடந்த 3 வாரங்களில் டேனியலி தொடர்ச்சியாக 2 டபுள்யு.டி.ஏ தொடர்களில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Related Stories: