பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆஜர்: இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி. ஆகியோர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர். இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை சிறப்பு டி.ஜி.பி. தனது காரில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 23ம்தேதி, பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பூர்ணிமா முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன், நேற்றையதினம் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் ஆஜர்படுத்த, சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பின், இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். இந்தநிலையில், நேற்று காலை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யும், எஸ்.பி கண்ணனும் ஆஜரானார்கள். அதன்பின், இரண்டு பேருக்கும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை நீதிபதி வழங்கினார். மேலும், இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையும் நடந்தது. பின்னர், இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டு வரும் 16ம்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

* வந்தது ஒரு காரில் சென்றது வேறொன்றில்

முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராவதையொட்டி விழுப்புரம் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விசாரணைக்கு காரில் வந்திருந்த முன்னாள் சிறப்பு டி.ஜி.பிஐ பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்காமல் தடுக்க 2, 3 கார்களை தயாராக நிறுத்தி வைத்திருந்தார். விசாரணை முடிந்து புறப்படும்போது, முன்பக்கம், பின்பக்கம் இரண்டு இடங்களிலும் காரை நிறுத்தியிருந்தனர். வரும்போது ஒரு காரிலும், புறப்படும்போது வேறொரு காரிலும் சென்றார். இதனால், பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க முடியாமல் திண்டாடினர்.

Related Stories: