சிட்டி ஓபன் டென்னிஸ்: இத்தாலி இளம் வீரர் ஜான்னிக் சின்னர் சாம்பியன்

வாஷிங்டன்: வாஷிங்டனில் நடந்த சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் இளம் நட்சத்திரம் ஜான்னிக் சின்னர், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வாஷிங்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த சிட்டி ஓபன் டென்னிஸ் பைனலில் 19 வயதேயான இத்தாலியின் ஜான்னிக் சின்னரும், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டும் மோதினர். ஏடிபி தரவரிசையில் ஜான்னிக் சின்னர் தற்போது 24ம் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் காலிறுதிக்கு முன்னேறி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார். 2வது செட்டை மெக்கன்சி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3வது செட்டில் 5-3 என்ற கணக்கில் சின்னர் முன்னிலையில் இருந்தார். ஆனால் சின்னருக்கு கிடைத்த 2 சாம்பியன்ஷிப் பாயின்ட்டுகளையும் மெக்கன்சி பிரேக் செய்து, அசத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து 3 கேம்களை மெக்கன்சி கைப்பற்ற 5-5 என இருவரும் சமநிலையில் இருந்தனர்.

ஆனால் கடும் போராட்டத்திற்கு பின்னர் 3வது செட்டை 7-5 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றி 7-5, 4-6, 7-5 என்ற கணக்கில் வென்று, சிட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது 2வது ஏடிபி பட்டம் என்பதுடன், 19 வயதில் ஏடிபி பட்டத்தை வென்ற வீரர்களின் வரிசையில் அவரும் இணைந்துள்ளார். 3 மணி நேரம் நடந்த இப்போட்டியில் அவரது ஆட்டம், அனைவரையும் கவர்ந்தது. ‘டென்னிஸ் உலகில் அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது’ என்று இப்போட்டியில் அவருடன் மோதிய மெக்கன்சி பாராட்டினார். கடந்த 2017ம் ஆண்டு ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், சிட்டி ஓபன் பட்டத்தை தனது 20வது வயதில் வென்று, இந்த பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது ஜான்னிக் சின்னர், 19 வயதில் வென்று, ஸ்வரெவின் சாதனையை முறியடித்துள்ளார். இது ஜான்னிக் சின்னரின், 2வது ஏடிபி பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: