ஆண்டிபட்டி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ-ரூ.பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு மொத்த வியாபாரி. ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின், குடோனை அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் குடோனிலிருந்து கரும்புகை எழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் போராடி கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: