உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டியில் பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

உத்தமபாளையம் : உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி மாநில நெடுஞ்சாலை பள்ளம்மேடாக பல்லாங்குழி ரோடாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி செல்லும் சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த வழியே தான் தினமும் செல்கின்றனர். ஆனால், யாரும் இச்சாலை பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள சாலை மற்றும் தடுப்புபாலம் அருகே நெடுஞ்சாலை முழுவதும் பள்ளம்மேடாக பல்லாங்குழி ரோடாக காட்சியளிக்கிறது. இந்த சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

இந்த சாலையில் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க உத்தம்பாளையம் நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ம.ம.க., தேனி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி கூறியதாவது: இப்பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: