ஆப்கானிஸ்தானில் ஊடுருவிய தலிபான்கள்: தாகார், ஜவ்ஜான், நிம்ரோஸ், மாகாணங்களை தொடர்ந்து குண்டூஸ் மாகாணத்தையும் கைப்பற்றியது பயங்கரவாத அமைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் முக்கியமான குண்டூஸ் மாகாணத்தையும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மற்றும் அரசு படைகளுக்கு இடையே 20 ஆண்டுகளாக உள் யுத்தம் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பக்ரம் விமான தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரான ஷேபர்கான் நகரில் நடந்த சண்டையில், 200 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் குண்டஸ் மாகாணத்தின் லஷ்கர் கா நகரில் விமானப் படை நடத்திய தாக்குதலில் 30 பாக்., பயங்கரவாதிகள், அல் - குவைதா பயங்கரவாதிகள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது, அப்பகுதியில் இருந்த மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவை சேதம் அடைந்தன.

பெரும்பாலான மாகாணங்களை தங்கள் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே தாகார், ஜவ்ஜான், நிம்ரோஸ், மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியமான குண்டூஸ் மாகாணத்தையும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. 4 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது.

Related Stories: