ஒட்டுமொத்த தூய்மைப் பணியால் அண்ணாமலையார் கோயிலில் புதுப்பொலிவு பெற்ற பிரகாரங்கள்

*இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது. அதனால், கோயில் பிரகாரங்கள் பளிச்சென புதுப்பொலிவு பெற்றுள்ளன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கோயில் பிரகாரங்களை ஒட்டுமொத்தமாக தூய்மைப்படுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் கடந்த 3 நாட்களாக ஒட்டுமொத்த தூய்மைப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, கோயில் தங்க கொடிமரம், முதல் பிரகாரம் தொடங்கி 5ம் பிரகாரம் வரையுள்ள சன்னதிகள் ஆகியவற்றை ஊழியர்கள் தூய்மை செய்தனர். அதனால், கோயில் பிரகாரங்கள் பளிச்சென புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேலும், தரிசனத்துக்கு பக்தர்கள் செல்லும் வரிசையில் உள்ள தடுப்பு கம்பிகள், கைப்பிடிகள் போன்றவை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. எனவே, இன்று முதல் வழக்கம் போல கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories:

>