இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் கோக்ராவில் வீரர்களை திரும்ப பெற ஒப்புதல்

புதுடெல்லி:  கிழக்கு லடாக்கின் கோக்ராவில் இருந்து இருநாட்டு ராணுவ வீரர்களை திரும்ப பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியா- சீனா இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளும் ராணுவ வீரர்களை குவித்தன. பின்னர் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் தொடர்ந்து வீரர்களை திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

12வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த சனியன்று சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியான மோல்டாவில் 9 மணி நேரம் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து அறிக்கையை வெளியிட்டன. இதில் ஒப்பந்தங்கள் மற்றம் விதிமுறைகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை விரைவாக தீர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 12வது கட்ட பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில், கோக்ராவில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களையும் திரும்ப பெறுவதற்கு இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. பாங்காங் லேக் பகுதியில் இருந்து இருநாட்டு வீரர்கள் திரும்ப பெறப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் தற்போது கோக்ராவில் இருந்து இருநாட்டு ராணுவ வீரர்கள் திரும்ப முடிவு எட்டப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: