ஆடி கொடைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வெறிச்சோடியது

உடன்குடி: ஆடிக் கொடை விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மட்டுமின்றி ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும். இந்தக் கோயிலில் ஆடிக்கொடை விழா நேற்று மற்றும் இன்று (செவ்வாய்), நாளை (4ம் தேதி) ஆகிய 3 நாட்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக வெளிமாவட்ட பக்தர்கள் திருச்செந்தூர் லாட்ஜ்களில் அறைகள் பதிவு செய்து இங்கு வர தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் கொரோ னா 3வது அலை எச்சரிக்கை காரணமாக மக்கள் கூடும் இடங்களான கோயில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு ஜூலை 31ம் தேதி முதல் வருகிற ஆக.9ம் தேதி வரை அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நேற்று முன்தினம் தொடங்கிய ஆடிக்கொடை விழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. பக்தர்கள் கோயிலுக்குள் நுழையாத வகையில் பந்தல் கம்புகளால் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுபோல் நேற்று ஆடிக்கிருத்திகை, இன்று ஆடிப்பெருக்கு ஆகிய விழாக்களும் பக்தர்கள் இல்லாமல் நடந்தன. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டு 5 நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சுற்றுலாவை ஏற்பாடு செய்த பக்தர்கள், கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்தது தெரியாமல் வழக்கம் போல் கோயிலுக்கு வாகனங்களில் வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் ஏமாற்றத்துடன் சென்றனர். கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் அறிவுரையின் பேரில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: