வீடுகள் இல்லாத மக்கள் பயன்பெற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு விருப்பம் உள்ள பயனாளிகள் விண்ணபிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்  2112 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.இதில் 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பம் உள்ள பயனாளிகள் விண்ணபிக்கலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் வசிப்பவர்கள், அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பயனாளிகள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு அவர்களுக்கு இத்திட்டத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.மேலும், இதில் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானிய தொகை போக மீதம் உள்ள 1.5 லட்சத்தை பயனாளிகளின் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்.

குறிப்பாக, இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்த வீடு இல்லாமலும், ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சான்றளிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கலெக்டர் தலைமையில் நாளை காலை 11 மணியளவில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பபட்டுள்ளது.

Related Stories: