இந்தியா - சீனா 12ம் சுற்று பேச்சுவார்த்தை ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவில் படைகளை விலக்க ஒப்புதல்?

புதுடெல்லி: எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய கோக்ராவில் இருந்து ராணுவத்தை விலக்கி கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்தாண்டு மே மாதம் முதல் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லையில் இருநாடுகளும் ராணுவத்தை குவித்துள்ளன. இதையடுத்து, இரு தரப்பிலும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கடந்த பிப்ரவரியில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இருநாடுகளின் படைகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 12வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று காலை 10.30 மணிக்கு சீனாவுக்கு உட்பட்ட அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள மால்டோவில் நடந்தது. இதில் கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லை பகுதியான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவில் படைகளை திரும்ப பெற இரு தரப்பிலும் ஒப்பு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ஜெய்சங்கர் காரணமா?

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் கடந்த 14ம் தேதி நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்த ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கிழக்கு லடாக் எல்லை பிரச்னை இருநாடுகளின் நட்புறவை பாதிப்பதாக தெரிவித்தார். இதையடுத்தே, இந்த 12வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ராணுவத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: