ஆப்கானிஸ்தானில் ஐநா வளாகத்தில் குண்டுவீசி தாக்குதல்: கட்டரஸ் கடும் கண்டனம்

ஐநா: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்தே தலிபான்களின் ஆட்டம் அதிகரித்துள்ளது. ஆப்கன் அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு, நாட்டின் பல பகுதிகளை தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். தற்போதும் பல இடங்களில் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிரத் நகரில் உள்ள ஐநா வளாகத்தில் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிரத் நகரில் உள்ள ஐநா அலுவலகத்தின் மைய வளாகத்தில் ராக்கெட் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் பலியாகி உள்ளனர். ஐநா அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு ஐநா பொதுச் செயலாளர் கட்டரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா பணியாளர்கள் மற்றும் வளாகங்கள் மீதான தாக்குதல் சர்வதேச விதிமுறை மீறலாகும், இது போர்க்குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டரஸ் எச்சரித்துள்ளார்’ என கூறி உள்ளார்.

Related Stories:

>