ஜனாதிபதி ஆக.3ல் ஊட்டி வருவதால் தாவரவியல் பூங்கா, ராஜ்பவன் மாளிகை பொலிவுபடுத்தும் பணி தீவிரம்

ஊட்டி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 3ம் தேதி ஊட்டிக்கு வர உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ராஜ்பவன் மாளிகை பொலிவுபடுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் ஆக.2ம் தேதி தமிழகம் வருகிறார். அதன்பின், 3ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வரும் அவர், ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். 4ம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். இரண்டு நாட்கள் ஓய்விற்கு பின் 6ம் தேதி கோவை சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஊட்டி வரும் நிலையில், அவர் தங்க உள்ள ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

ராஜ்பவன் மாளிகை நுழைவு வாயில் கட்டிடம், பூந்தோட்டம் உள்ளிட்டவை தயார் செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதி, பூங்காவில் உள்ள கட்டிடங்கள், அலங்கார தடுப்புகள் உள்ளிட்டவை வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. மேலும், பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள தீட்டுக்கல் முதல் மேரிஸ்ஹில், கலெக்டர் அலுவலகம் வழியாக தாவரவியல் பூங்கா வரை உள்ள சாலை சீரமைக்கப்பட்டு வருகின்றன. சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு, பள்ளங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சாலையோர தடுப்புகள், அலங்கார விளக்குகள் சரி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா வளாகத்திற்குள் சாலை தார் ஊற்றி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories: