உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைனில் ஓவியம், ஸ்லோகன் போட்டி-ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

ஊட்டி : உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் புலிகளின் பாதுகாப்பு நம் கைகளில் என்ற கருப்பொருளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இணையவழியில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை புலிகள் மற்றும் அதன் வாழ்விடம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, புலியை போன்று நடித்து காட்டும் வீடியோ போட்டி, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் புலிகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் ஸ்லோகன் போட்டி, 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளவர்கள் பங்கேற்கும் புலியாட்டம் ஒரு நிமிட வீடியோ, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ரங்கோலி போட்டி ஆகியவை நடைபெற்றது.

இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 320 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 290 பேர் ஓவியப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர்.

முதுமலை கார்குடி பழங்குடியினர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 50 பேரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆன்லைன் வழியில் நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் ஆன்லைன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டம் சார்பில் புலிகள் தின நிகழ்ச்சி நடந்தது. புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கௌசல் தலைமையில் துணை இயக்குநர்கள் பத்மா, காந்த் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: